இவரை பயிற்சியாளராக கொண்டுவர இதுவே சரியான நேரம்! மலிங்கா கூறிய அந்த வீரர் யார்?
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவை தேசிய அணியில் பயிற்சியாளராக சேர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழுவிற்கு வாழ்த்துக்களை வெளியிட்டு தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் லசித் மாலிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுவன் குலசேகர, பிரபாத் நிஷங்க போன்ற முன்னாள் வீரர்களை தேசிய அணிக்கு பயிற்றுவிப்பாளராக கொண்டு வருவதற்கான காலம் வந்துள்ளதாகவும் அந்த பதிவில் மாலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர்களுடன் பயிற்சியாளராக பணியாற்றியதாகவும், அவர்களது திறமைகள் மற்றும் நிபுணத்துவத்தை அங்கு பார்த்ததாகவும் மாலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உபுல் தரங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மாலிங்க,
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை கட்டியெழுப்புவதற்கு தெரிவுக்குழு சிறப்பான பணியை செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.