தமிழர் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பானதும் சுகாதாரமானதுமான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொது சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனையின்போது, அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தீவிரமாகச் சோதனையிடப்பட்டன.

இதன்போது, இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட கோழிகள் கண்டறியப்பட்டு, சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இவ்வாறான விசேட பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.