தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்ப எதிர்ப்பைத் தொடர்ந்து இளம்பெண் ஒருவர் அவரது இரு சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படோஹி மாவட்டத்தின் ஜகோன் கிராமத்தைச் சேர்ந்த குஷி பிந்த் என்ற இளம்பெண், கடந்த 4ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதன்போது, அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரர்கள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குஷியின் சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குஷி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குஷியின் குடும்பத்தினரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, குஷியைக் கொலை செய்ததாக அவரது இரு இளைய சகோதரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, 18 வயதுடைய சுராஜ் பிந்த் மற்றும் 15 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், குஷி பிந்த் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று குஷி குறித்த இளைஞருடன் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த இரு சகோதரர்களும் இணைந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைக்கும் நோக்கில் குஷியின் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இந்தியப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.