என்னை இலங்கைக்கு திருப்பிஅனுப்புங்கள்; கண்ணீர்விட்டு கதறி அழும் தமிழ் இளைஞன்
இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் தனக்கு இந்திய பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் அல்லது தன்னை இலங்கைக்கு திரும்பி அனுப்பவேண்டும் என இளைஞன் மன்றாடி கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழ் இளைஞர் முழந்தாளிட்டு இக்கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில்,
படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது தமிழகம் வந்தேன்
'இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர்.
அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன்.
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஜாயை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார். தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர்.
எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன்.
இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இளைஞர் கண்ணீருடன் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.