19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இது கட்டாயம்!
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது
அதேசமயம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
இந் நிலையில் , செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.