யாழில் பொலிஸார் அதிரடியால் கலக்கத்தில் மணல் மாபியாக்கள்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடிய சாரதி
இன்று (29) அதிகாலை வேளை சட்டவிரோத மணலுடன் பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை, ஒரு உழவு இயந்திர சாரதி, வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில், மற்றைய வாகனத்தின் சாரதியை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கைதான நபரையும், கைப்பற்றப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள நிலையில், தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த வாரம் குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற போது, தமது கட்டளையை மீறி தப்பி செல்ல முற்பட்டார் என உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோக மேற்கொண்டதில் 18 வயதான சாரதி, படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

