இலங்கையில் சடுதியாக உயர்ந்த உப்பின் விலை
இலங்கையில் 400 கிராம் உப்பு பொதி ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை சடுதியாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை இலங்கை சந்தையில் கொள்வனவு செய்யும் வாய்ப்பு தற்போது பொது மக்களுக்கு கிடைத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படவுள்ள பெருந்தொகையான உப்பு
இலங்கையில் வருடாந்த உப்பின் நுகர்வு சுமார் 80,000 மெற்றிக் தொன் ஆகும். கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட சீரற்ற வானிலை நிலைமைகள் காரணமாக உப்பு உற்பத்தி மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, 15 வருடங்களின் பின்னர், நாட்டின் பொது பாவனைக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் உப்புப் பொதி இலங்கை சந்தையில் 150 ரூபாய் தொடக்கம் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.