யாழ். தாளையடி கடற்கரையில் கொந்தளிக்கும் கடல் ; சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைப் பகுதி சீரற்ற காலநிலை காரணமாகப் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்குவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
தற்போது கடலில் பாரிய அலைகள் எழுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், கடலில் குளிப்பதையோ அல்லது நீராடுவதற்காகக் கடலுக்குள் இறங்குவதையோ தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த கால உயிரிழப்புச் சம்பவங்கள் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில், எச்சரிக்கையை மீறிக் கடலில் இறங்கிய நான்கு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் பின்னணியில், தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், கடற்கரையில் அவதானமாகச் செயற்படுவதுடன் கடலுக்குள் இறங்குவதை முற்றாகத் தவிர்க்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.