அனோஜன் விவகாரம் ; சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட் எம்.பி
சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் தண்டனை
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.