தன்னார்வ ஓய்வு திட்டம் இழுபறி ; மின்சார சபை பணியாளர்கள் அதிருப்தி
இலங்கை மின்சார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட தன்னார்வ ஓய்வுக்காலத் திட்டத்திற்கு விண்ணப்பித்த 2,200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், அத்திட்டம் தொடர்ச்சியாக தாமதமாவதால் மிகுந்த கவலையும் நிச்சயமற்ற தன்மையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் இது தொடர்பாக வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகபூர்வ திகதியை உடனடியாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இழுபறி நிலை தங்களின் எதிர்காலத் திட்டங்களைச் சீர்குலைத்துள்ளதோடு, கடுமையான மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாற்று வேலைவாய்ப்புகள், சுயதொழில் முயற்சிகள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கு பணியாளர்கள் ஏற்கனவே தயாராகியுள்ளனர்.
ஆனால் முறையான திகதி அறிவிக்கப்படாததால் அவர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, துணை நிறுவனங்களுடன் இனி இணைந்திருக்கப் போவதில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே இவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் (திருத்தப்பட்ட) மற்றும் 2025 ஆகஸ்ட் 26 ஆம் திகதியிட்ட 2451/11 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றிற்கு அமைவாகவே இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஓய்வுக்கால முயற்சிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ள அதேவேளை, சில தரப்பினரின் சதி நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடைமுறை தாமதமாவதாக பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது இத்திட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு, இந்த விவகாரத்தில் நீதியுடனும் மனிதாபிமானத்துடனும் தலையிட்டு, ஓய்வுக்காலத் திகதியை விரைவாக அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.