யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச காணாமல் போனோர் தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலக் கோரிக்கையான தங்களது உறவுகளின் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக வழங்கப்படும் இழப்பீடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், தமது உறவுகளுக்கான மரணச் சான்றிதழ்களும் தங்களுக்கு தேவையில்லை என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
“எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?”
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்ததாகக் கூறி, அவர்களின் தற்போதைய நிலை குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமது உறவுகள் தொடர்பில் உண்மை மற்றும் நீதியே தங்களுக்கு தேவை எனவும், இழப்பீடு அல்லது மரணச் சான்றிதழ் வழங்குவதன் மூலம் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்போது, தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி சிலர் கதறி அழுததால் போராட்டம் நடைபெற்ற பகுதியில் உணர்வுபூர்வமான சூழல் ஏற்பட்டதுடன், சிறிது நேரம் பதற்றமான நிலையும் காணப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சர்வதேச ரீதியிலும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அவர்களின் உறவுகளின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.