ராமர்-ராவணனை பற்றி கூறி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரணில்
இலங்கைக்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராமர், ராவணனை தனது உரையில் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரையில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ராஜபக்சேக்களின் ஆட்சி கவிழ்ந்தது.
இதற்கிடையே தீவு நாடான இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவி செய்து வருகிறது. உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் டோர்னியர் 228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கி உள்ளது. இந்த டோர்னியர் விமானம் நேற்று (16-08-2022) இலங்கை அரசாங்கத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படை துணைத் தலைவர் கோர்மேட், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழச்சியில் இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்று கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு நாட்டை முன்னேற்றுவதற்கான வழியை காட்டினார். இந்தியா இன்று உலக வல்லரசாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருமாறும். இது நேருவுக்கு கிடைக்கும் மரியாதை.
மேலும் நாடாளுமன்றத்தில் நன்றாக பேசியதாக வாஜ்பாயை, நேரு இரவு விருந்துக்கு அழைத்து முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். இது அவரது மதிப்பை உயர்த்துகிறது.
இந்தியாவும் இலங்கையும் ஒரே பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இதேபோன்ற கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும், எங்களுக்கு வெவ்வேறு நம்பிக்கைகள் உள்ளன.
’இந்தியாவின் இந்து மதம் பின்பற்றப்படும் சூழலில் இலங்கையில் புத்தமதத்தினர் அதிகமாக உள்ளனர். ராமாயணத்தில் இந்தியர்களுக்கு ராமர் கடவுள். ரோல் மாடலாக உள்ள நிலையில் இலங்கைக்கு ராமர் மற்றும் ராவணன் ஆகியோர் ஹீரோக்களாக (கடவுளாக) உள்ளனர்'' என்றார்.
மேலும், இந்தியா - இலங்கை இடையேயான நட்பு காலம்காலமாக தொடர்ந்து வருகிறது. ஐநா சபையில் இலங்கை இடம்பபெற நேரு உதவினார். எனது தந்தைக்கு அவரை நன்றாக தெரியும்.
இருதரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் வகையில், கொழும்பில் நடைபெற்ற விழாவில், இலங்கை கடற்படைக்கு டோர்னியர் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்தியா வழங்கி உள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி.