ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறக்கும் சின்னம் இதுதானா? வெளியான தகவல்!
அடுத்த ஆண்டு (2024) மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானம் அறிவிக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய மக்கள் கூட்டணி என்ற பொதுக் கூட்டணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யானை சின்னத்தில் போட்டியிடுவார் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீணங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன்படி, நாடாளுமன்ற, ஜனாதிபதி, மாகா சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் தொடர்பில் முழுமையான நிதி அறிக்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எஸ். அச்சுதன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்த ஆண்டு நடாத்துவதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் வரவு - செலவு திட்ட உரையின் போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
2024 வரவு - செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்புடன் தேர்தலை இலக்கு வைத்து கட்சி தாவல்களும் அரசியல் மாற்றங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தீர்மானத்தை அரசாங்கம் அறிவிக்கலாம் என்று அரசாங்கத்தின் முக்கிய தகவல் மூலம் தெரியவந்துள்ளது.