நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நின்ற கைதிக்கு நடந்த அசம்பாவிதம்
பொலன்னறுவை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்டு, நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி நேற்று (14) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
பொலன்னறுவை, கிநிபெட்டி பாலத்திற்கு அருகில் வசிக்கும் 74 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்னேரியா பகுதியில் புத்தர் சிலைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜராகி பிணை அனுமதிக்கப்பட்ட போதிலும், பிணை வழங்குவதற்கு எவரும் முன்வராத காரணத்தினால் தொடர்ந்தும் பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் ஹிங்குராக்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.