வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி பயணம்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 64 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சார்பில் மிட்செல் மார்ஷ் 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 221 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சார்பில் வைபவ் சூர்யவன்ஷி அதிகபட்சமாக 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதில் 10 ஆறு ஓட்டங்களும் 7 நான்கு ஓட்டங்களும் அடங்கும். குறித்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.