போர்வீரர் நினைவிடத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணை கோரிக்கை
நாடாளுமன்றத்துக்கு அருகில் அமைந்துள்ள தேசிய போர் வீரர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்கு ஒரு குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினரான சுபுன் அபேசிங்க மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரால் இன்று (19) இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர், நேற்று (18) தேசிய போர் வீரர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்த போது அங்கு இடம்பெற்ற சம்பவமொன்று குறித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர், அந்த நினைவிடப் பகுதிக்குள் நுழைவதற்கு இந்த குழுவினருக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதான யுத்த வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகளும் ஒத்திகை நடவடிக்கைகளும் அந்த நேரத்தில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேரைக் கொண்ட குழுவினர், உரிய அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்றதாகவும், இதன் மூலம் உத்தியோகபூர்வ கடமைகளுக்கும் ஒத்திகை ஏற்பாடுகளுக்கும் இடையூறு விளைவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், காவல்துறையினர் தலையிட்டு அந்த குழுவினரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் ஏனையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.