அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது ; நாமல் தெரிவிப்பு
நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது என கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை (2024.03.27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.
சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொலர் கடன்களை பெற்றது. இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை.மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படடது.அந்த நிதியும் மாயமானது.
நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இறக்குமதி, பொருளாதாரத்தில் மாத்திரம் கவனம் செலுத்தியது.
தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நிர்மாணிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.இதற்கு அவருக்கு மக்களாணை கிடையாது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி புதிதாக மக்களாணை பெற்றுக்கொள்ள வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
கட்சி ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக செய்படுபவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்றார்.