ஹிட்லர் என கூறியவர்களுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்த ஜனாதிபதி அனுர!
அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று (7) முன்வைக்கப்பட்டது.

நிச்சயம் தண்டனை வழங்குவோம்
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். அதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பில் அறிவிப்பதற்காக கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், மேற்படி ஹிட்லர் கதையைக்கூறி எதிரணிகளை ஒன்றுபடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் ஹிட்லர் அறிவிப்பு பற்றி இன்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். ஹிட்லர் வந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர். நீங்கள் ரஷ்யாவா, நீங்கள் அமெரிக்காவா ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்தது வரலாற்றுக் கதை.
அது உலக அரசியலில் முக்கிய திரும்பு முனை. எதிரணிகள் எப்படியான விளக்கத்தை வழங்கினாலும் நாம் சட்டத்தை அமுலாக்குவோம். மக்களுக்கு அநீதி இழைத்திருந்தால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் தண்டனை வழங்குவோம்.
அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. எமது நடவடிக்கையை கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர நாடாம்ன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.