தமிழர் பகுதி வீடொன்றில் பயங்கரம் ; CCTV காட்சியால் வெளிநாட்டில் வாழும் மகனுக்கு அதிர்ச்சி
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உயிருக்கு போராடும் மனைவி
குமுழமுனை பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதுடைய மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டிருந்தது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (6) இரவு உணவருந்தி நித்திரைக்கு சென்ற கணவன், இன்று (7) காலை கோடாரியைக் கொண்டு மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர், குறித்த கணவன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக நேரடியாக பார்வையிட்டதையடுத்து, உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
CCTV காணொளி
பின்னர், உறவினர்கள் வீட்டிற்கு சென்று மனைவியை மீட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த கணவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றுவரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



