க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்று (27) ஆரம்பமாகின்றன.
குறித்த செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இசை, நடனம், நாடகம் மற்றும் அரங்கியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளே இவ்வாறு நடைபெறவுள்ளன.

இதன்படி, கீழைத்தேய இசை, மேலைத்தேய இசை, கர்நாடக இசை, உள்நாட்டு நடனம், இந்திய நடனம், சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் நாடகம், அரங்கியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பரீட்சார்த்திகள் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று தமது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.