“அர்னாப்” புயலால் இலங்கையில் மழை அதிகரிக்கும் சாத்தியம் ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் மேற்கு – மத்திய பகுதியில் நிலைகொண்டிருந்த “அர்னாப்” (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° ஆகிய புள்ளிகளுக்கு அருகில் இப்புயல் மையம் கொண்டிருந்தது.
இது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்குத் திசையில் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இப்புயல், அதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையூடாகக் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இப்புயலின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், புயலை நோக்கி ஈர்க்கப்படும் காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதன்போது சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.