கட்டுநாயக்காவில் பிடிபட்ட விமான பணிப்பெண் ; பிரித்தானிய யுவதியின் சிறைமாற்றத்துக்குப் பின்னணி என்ன?
இலங்கைக்கு சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான செயற்கைக் கஞ்சாவைக் கடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரித்தானிய முன்னாள் விமானப் பணிப்பெண் சார்லட் மே லீ (Charlotte May Lee), பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“அர்னாப்” புயலால் இலங்கையில் மழை அதிகரிக்கும் சாத்தியம் ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை
தெற்கு லண்டனைச் சேர்ந்த 22 வயதான சார்லட் மே லீ, சுமார் 100 பவுண்டுகள் எடையுடையதாகக் கூறப்படும் போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் சுமார் 18 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மீது இதுவரை முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனப் பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஜூலை மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் 20 கைதிகளும் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்ததாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் சார்லட் மே லீயை மனரீதியாகக் கடுமையாகப் பாதித்ததாக அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து குளியாப்பிட்டிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, தற்போது அவரது உடல்நிலையும் மனநிலையும் சீராக இருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியப் பெண்ணின் சிறைமாற்றம், அவரது பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பான கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.