'எல் நினோ' காலநிலை சூப்பர் எல் நினோ வாக மாறுவதற்கான வாய்ப்பு ; ஆய்வாளர்கள் எச்சரிக்கை
தற்போது நிலவும் 'எல் நினோ' காலநிலை, 'சூப்பர் எல் நினோ'வாக மாறுவதற்கான வாய்ப்பு 81 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை மையம், எச்சரித்துள்ளது.
இந்த காலநிலை மாற்றம் 2027-ஆம் ஆண்டின் தொடக்க வசந்த காலம் வரை நீடிக்க 97 சதவீத வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1°C முதல் 3°C வரை அதிகரித்துள்ளது.

97 சதவீத வாய்ப்பு
இது கடந்த நூற்றாண்டின் வலுவான எல் நினோ காலநிலையில் ஒன்றாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த மாற்றத்தால் தென்கிழக்கு ஆசியாவில் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பயிர் இழப்புகள் ஏற்படலாம் எனவும், ஏனைய சில பிராந்தியங்களில் அதீத மழையும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த எல் நினோவின் தாக்கம் வலுவடைந்து வருவதால், 2026 அல்லது 2027-ஆம் ஆண்டுகள் உலகளாவிய வெப்பநிலையில் புதிய உச்சத்தைத் தொடக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வானிலை மாற்றங்கள் உலகளாவிய விவசாயச் சந்தைகளிலும், பயிர் உற்பத்தியிலும் கடுமையான சவால்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.
அதேவேளை NOAA அமைப்பு கடந்த ஜூன் மாதம் எல் நினோ தொடக்கத்தை அறிவித்த நிலையில், அதன் தீவிரம் எதிர்பார்ப்பை விட வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.