யாழில் இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸார் ; பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படும் தகவல்கள்
யாழ். நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி குற்றம் சாட்டிய சம்பவம் பொலிஸார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதுபோதையிலிருந்த போதும் அவர் தப்பியோடிய போது வீதியில் கீழே விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டடுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய், மண்டான் பகுதியை சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால் நின்றபோது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார், என் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு, தமது கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு எதற்காக என்னை தாக்கி, கைது செய்தீர்கள் என கேட்ட போது, வயர் வெட்டின சம்பவம் தொடர்பில் என கூறினார்கள். எனக்கு அப்படியொரு சம்பவம் தெரியவில்லை.
பின்னர் எனக்கு கைவலி ஏற்பட்டு, நான் வலியினால் துடித்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய போது மந்திகை வைத்தியசாலையில் என்னை அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் “வீடியோ கோல்” ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் என்னை பார்வையிட்டு எனக்கு பிணை வழங்கி எனது வழக்கினை எதிர்வரும் 10ஆம் மாதத்திற்கு திகதியிட்டுள்ளார்.
என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை குறித்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் . பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
பெயின்டிங் வேலைக்கு சென்றே எனது குடும்பத்தினை பார்த்து வருகிறேன். தற்போது பொலிசாரின் தாக்குதலால் எனது கை முறிந்து உள்ளதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
அதனால் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எனினும், பொலிஸ் தரப்பல் தெரிவிக்கப்படும் தகவல்கள் வேறானவை.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் தொலைத்தொடர்பு கேபிள் வயர்கள் வெட்டப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு, ரெலிக்கொம் நிறுவனம் தொடர்ந்து முறைப்பாடு செய்தது.
அந்த வயரை வெட்டி, உள்ளிருக்கும் செப்பை விற்பனை செய்பவர்கள் இந்த களவில் ஈடுபட்டிருந்தனர். அண்மையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போதும், இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட, உடன் நடவடிக்கையெடுக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு திணைக்கள ரீதியிலான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நெல்லியடி பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரை அடையாளம் கண்டனர். எனினும், அவர் பொலிசாரின் பிடியில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.
அவர் கொடிகாமம் பகுதியில் வசிக்கும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் நெருங்கிய உறவினர் எனவும், அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலேயே தலைமறைவாக பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அந்த வீட்டுக்கு சென்றபோது, அவர் தப்பியோடிய போது அவரை விரட்டிப் பிடித்து கைது செய்ததாகவும் நெல்லியடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் அவரை சூட்சுமமான முறையில் மதுபோதையில் ஆழ்த்திய பின்னர் அவரை வளைத்துப்பிடிக்க திட்டமிட்டனர்.
மதுபோதையிலிருந்த போதும் அவர் தப்பியோடிய போது வீதியில் கீழே விழுந்ததில் கைமுறிவு ஏற்பட்டடுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதை உறுதி செய்யும் விதமாக, சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில், அவரது கையில் பழைய காயம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசார் தெரிவித்தனர்.
கைதான நபரிடமிருந்து, திருடப்பட்ட பெருமளவு கேபிள் வயர்கள் மீட்கப்பட்டு, வழக்கு சான்றுப்பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், கேபிள் திருட்டு தொடர்பாக அவர் மீது 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.