திகிலில் உறைந்த திருவனந்தபுரம் ; காதலி உள்பட 5 பேரை கொலை செய்த இளைஞன்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை என்ற பகுதியை சேர்ந்தவர் முகம்மது. இவரது மனைவி ஷெமி. இவர்களுக்கு அஃபான் (23) அப்சான் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
திருவனந்தபுரத்தில் திகில்
முகம்மது துபாயில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அஃபான் வேலை தேடி துபாய்க்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு வேலை கிடைக்காதால் அவர் சமீபத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பினார்.
இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (25) இரவு 7 மணியளவில் அஃபான் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து, தான் 6 பேரை கொலை செய்ததாக கூறிய நிலையில் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அங்குள்ள பாங்கோடு பேருமலை மற்றும் சுள்ளால் ஆகிய இடங்களில் அவர் 6 பேரை கொடூரமாக தாக்கியதில் 5 பேரும் கொல்லப்பட்டது தெரியவந்தது. அஃபான் தன்னுடைய காதலி பர்சானாவை கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை இவர் தன்னுடைய வீட்டில் வைத்து தாய் ஷெமி, காதலி பர்சானா மற்றும் தம்பி அப்சான் ஆகியோரை சுத்தியலால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதன் பின்னர் அருகிலுள்ள பாங்கோடு என்ற இடத்தில் வசிக்கும் தன்னுடைய பாட்டி சல்மா பீவியை (88) சுத்தியலால் தாக்கியுள்ளார்.
இதன்பிறகு அருகிலுள்ள சுள்ளால் பகுதிக்கு வந்து தன்னுடைய பெரியப்பா லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி ஷாகினா (53) ஆகியோரையும் சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அஃபானின் தாய் ஷெமி தவிர மற்ற 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தன்னுடைய காதலியை உறவினர்கள் ஏற்க மறுத்தது தான் இந்த கொடூர கொலைகளுக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இளைஞனால் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.