விபத்துகளைத் தடுக்க பொலிஸார் எடுத்த அதிரடி முடிவு
வீதிகளில் அலட்சியமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு, வீதியிலேயே தண்டப்பணம் விதிக்கும் அபராத பத்திரம் வழங்காமல், அவர்களுக்கு எதிராக நேரடியாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாசீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (26) வரையான காலப்பகுதிக்குள் மட்டும் நாட்டில் 1,292 கோர வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, குறித்த காலப்பகுதியில் பாரதூரமான காயங்கள் ஏற்பட்ட விபத்துகள் 2,512 உம், சிறு விபத்துகள் 5,059 உம் பதிவாகியுள்ளன.

இந்த விபத்துக்களினால் 467 பாதசாரிகளும், 465 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதிகளின் அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டும் முறைகளுமே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கள் காரணமாக 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 60 பயணிகளுடன் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்து ஒன்று, இன்று (27) அதிகாலை 1.10 மணியளவில் தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தின் பிரேக் செயலிழந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 6 பேர் பெண்களாவர். காயமடைந்தவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாத்தறை - தலல்ல வீதியின் வஜிரவங்ச மாவத்தை பகுதியில் நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.