பிணையில் விடுவிக்க கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்
கைது செய்யப்பட்ட நபரொருவரை பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்காக நபரிடமிருந்து கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரிய சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாக அழுலுக்குவரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி குறித்த பகுதியில் கைது செய்யப்பட்ட நபரொருவரை பிணையில் விடுவிப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்து, கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதற்கயைம முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கமைய சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.