கற்பிட்டியில் திடீர் சுகவீனமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க கடற்படை உதவி
புத்தளம் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் திடீர் சுகவீனமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த பெண் ஒருவரை மீட்டு, சிகிச்சைக்காக கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர்.
பத்தலங்குண்டுவ தீவில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகத் தற்காலிகமாகத் தங்கியிருந்த பெண் ஒருவர் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.

இது குறித்துக் கிடைத்த அவசரத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை (01) இரவு கடற்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்திற்குச் சொந்தமான 'P 265' கடலோர ரோந்துப் படகின் மூலம் குறித்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, விஜய நிறுவனத்தின் இறங்குதுறைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக அவசரச் சிகிச்சைக்காகக் கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

