தங்க நகைகளை திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி
காலி கரந்தெனிய பகுதியில் வீட்டு கிளி மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சந்தேக நபரின் கணவர் கறுவா வெட்டச் சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாக அவரது மனைவி அவருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து கணவர் கரந்தெனிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, திருட்டு நடந்த அறையின் வாசற்படியில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி தொடர்ந்து தங்கியிருப்பது பொலிஸாரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், அந்த அறையில் வெளியாட்கள் நுழைய முடியாத நிலை காணப்பட்டதால், திருட்டு வீட்டில் உள்ளவராலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
அலுமாரியில் காணப்பட்ட மிளகாய் தூள் மற்றும் சமையலறையில் இருந்த மிளகாய் தூளை ஒப்பிட்டு பார்வையிட்டபோது, இரண்டும் ஒரே மாதிரியானவை என்பதும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
திருட்டு நடந்த நேரத்தில் சந்தேக நபரான பெண்ணும் அவரது சிறுவயது மகனும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
எனவே, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. சந்தேக நபர் முதலில் திருட்டை ஒப்புக்கொள்ள மறுத்ததால், அம்பலாங்கொடை பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மோப்ப நாய் இருமுறை அலுமாரியைக் குறித்த பின்னர், பெண் திருட்டை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.