ஹனிமூன் பயணத்தில் பெற்றோர் பங்கேற்பு ; விவாகரத்து கோரிய மணப்பெண்
இந்தியாவில் நைனிடாலுக்கு ஹனிமூன் பயணமாக சென்ற புதுமணத் தம்பதியரின் விவகாரம் தற்போது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
தகவல்களின்படி, தனது மனைவியுடன் ஹனிமூன் பயணமாக நைனிடாலுக்கு சென்ற கணவர், தனது பெற்றோர்களையும் அதே பயணத்தில் இணைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் தம்பதிகளுக்கிடையிலான தனிமை பாதிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மனைவி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் தனியாக நேரத்தை செலவிட வேண்டிய சூழலில், குடும்ப உறுப்பினர்கள் பயணத்தில் இணைந்தது தங்களது உறவை பாதித்ததாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ரெடிட் உள்ளிட்ட தளங்களில், திருமணத்திற்குப் பின்னர் தம்பதிகளுக்கு தனிமை என்பது அடிப்படை உரிமை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பயணம் செய்வது உறவுகளை வலுப்படுத்தும் என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், பாரம்பரிய குடும்பப் பழக்கவழக்கங்களுக்கும், இன்றைய தலைமுறையினரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான முரண்பாட்டை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டுவந்துள்ளது.