யாழில் மூதாட்டி கொலை சந்தேக நபர் பகீர் வாக்குமூலம்!
மனைவியின் மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றதாக கைதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
72 வயதுடைய மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி த தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து நேற்றுக் காலை இராசாவின் தோட்டம் பகுதியில் கொலைச் சந்தேக நபர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரிடம் அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,
“வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையைச் செய்யுமாறு கேட்டிருந்தார். மறுநாள் சென்ற போது பட்ட மரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடரி மண்வெட்டியை அவர் வாங்கித்தந்தார்.
எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.
அதனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் கோடரியால் தலையில் தாக்கி சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர், அங்கு பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார். அதேவேளை பணத்துக்காக மூதாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் யாழில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி
யாழ்ப்பாணத்தை உலுக்கிய மூதாட்டி கொலை விவகாரம்; சிக்கிய சந்தேகநபர்