மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வெளியான தகவல்
மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த மீனவப் படகை, கடந்த 7ஆம் திகதி அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
'அவிஷ்க புத்தா' எனப்படும் குறித்த மீனவப் படகில் 355 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக மாலைத்தீவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு தொடர்பில் மாலைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் படகு நேற்று (10) விஷேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது படகிலிருந்த 24 பொதிகளில் இருந்து 58 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 297 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் எனத் தெரியவந்துள்ளது. மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்தப் போதைப்பொருள் தொகை, மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் சுற்றிவளைப்பாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் தொகையை அந்நாட்டு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்றும் கடற்படையின் விஷேட குழுவொன்று மாலைத்தீவுக்கு சென்றுள்ளதுடன், அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.