இந்தியாவை அதிரவைத்த டெல்லி குண்டு வெடிப்பு; 10 பேர் பலி; விசாரணை தீவிரம்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் (10) மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன், அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குண்டு வெடிப்புக்கு காரணம் வெளியாகாத நிலையில் , கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை தீவிரம்
அதேவேளை சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்ததுடன் லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, என்எஸ்ஜி மற்றும் என்ஐஏ குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறினார்.
கார் சாரதி அடையாளம்
கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
இதனிடையே, டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சீல் செய்து, காவல் துறை, என்.ஐ.ஏ., தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி கார் குண்டு வெடித்தபோது காரை ஓட்டிவந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டு வெடிப்பிற்கு அரைமணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்றது தெரியவந்தது.
காரை ஓட்டி வந்தவரின் புகைப்படத்தை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. உமர் என்று அழைக்கப்படக்கூடிய அந்த நபர் காரை பதர்ப்பூர் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டு வந்ததாகவும் நேற்று மாலை 3 மணிநேரம் செங்கோட்டை அருகே உள்ள பூங்காவில் நிறுத்திவைக்கப்பட்டு அதன்பின் மாலை 6.30 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிக்னல் அருகே காரை கொண்டுவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை தாரிக், உமர், அமீர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறது