சிறைச்சாலைக்குள் கூரை வழியாக பொதி; அதிகாரி கைது
மாத்தறை சிறைச்சாலைக்குள் கூரை வழியாக பொதி ஒன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று (21) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் மாத்தறை சிறைச்சாலையில் கடமையாற்றும் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள்
கடந்த 09 ஆம் திகதி கூரை வழியாக மாத்தறை சிறைச்சாலைக்குள் பொதி ஒன்று வீசப்பட்டது. இதனை கண்ட சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் பொதியை சோதனையிட்ட போது, அதிலிருந்து கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மாத்தறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த பொதியை சிறைச்சாலைக்குள் வீசிய அதே சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.