வாக்குவாதம் தீவிரமடைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி
பதுளை அம்பகஸ்தோவ பகுதியில் ஒரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடகும்புர, பகுதியைச் சேர்ந்த லால் கருணாரத்ன என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 38, 31 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை ஒன்றில், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு குழுவிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இத்தாக்குதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.