யாழில் நியூசிலாந்துத் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநருக்கும், நியூஸிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை(28) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக ஆளுநர் விளக்கமளித்தார்.
அத்துடன் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றமையும் எதிர்காலத்தில் பொருட்கள் கப்பல் சேவை நடைபெறவுள்ளமையையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி வடக்கு மாகாணத்துக்கு வருவதற்காக போக்குவரத்துக்கு பெருமளவு நேரத்தை விரயமாக்கின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரையிலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பில் நியூஸிலாந்துத் தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
விளிம்புநிலையில் உள்ள மக்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன எனவும், ஒரு வேளை உணவுடன் அவர்கள் தமது அன்றாட உணவு உட்கொள்ளலை நிறுத்திக்கொள்கின்றனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.