'ஹரக்கட்டா' இலஞ்ச வழக்கு ; நீதிமன்றில் அம்பலமான பல உண்மைகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் 1,200 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் அருண வருஷஹென்னதிகே ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் மனைவி மஹேஷிகா மதுவந்தி வழங்கிய வீடியோ வாக்குமூலம் மற்றும் சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஆதாரங்கள் தற்போது விசாரணை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த இலஞ்ச விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கிடையில் 1,300-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதி பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு சென்றதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
குறித்த பிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முழுமையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், இந்த மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் ஒரு இலஞ்ச முறைப்பாடும் கிடைத்துள்ளதால் அதுகுறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.
இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை முன்வைத்து பிணை கோரினர்.
இருப்பினும், முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணை மனுக்கள் தொடர்பான உத்தரவை ஜூலை 28 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்து, அதுவரை மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.