போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய மட்டத்தில் புதிய நடவடிக்கைகள்
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயல்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
கைது செய்யப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த சட்டத் திருத்தங்களின் இறுதிக் கட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, சட்டத் திருத்தத்திற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் மற்றும் அதன் சட்டக் கட்டமைப்பு குறித்தும் தேசிய சபையின் முன்னிலையில் விளக்கமளிக்கப்பட்டது.
கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை தாமதமின்றி அழிப்பதன் அவசியம் குறித்தும், அது தொடர்பான தேசிய சபையின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
எதிர்காலத்தில் அதற்குரிய புதிய திருத்தங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.