கபில சந்திரசேன மரணம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியீடு
சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடமும் இதுவரை சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பது இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மூன்றாவது நாளாக இன்று நடைபெற்றபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது.
சிசிடிவி கெமரா
இதன்போது, மரணமடைந்தவரின் தற்போதைய வீடும் அவர் வசித்து வந்த வீடும் ஆகிய இரு இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களின் தரவுகள் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத இரண்டு வகையான மாத்திரைகள் மற்றும் சிசிடிவி டிவிஆர் இயந்திரங்களை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை பெறுவதற்கான அனுமதியையும் புலனாய்வு அதிகாரிகள் கோரினர்.
இதன்போது, கபில சந்திரசேனவுக்கு பிணை நின்ற இருவரிடம் இதுவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படாதது குறித்து நீதவான் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
“வாக்குமூலங்களோ குறிப்புகளோ பெறப்படவில்லை என்றால் விசாரணைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன? அவர்களைத்தானே முதலில் சாட்சியமளிக்க அழைத்திருக்க வேண்டும்?” என நீதவான் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி, “அந்த இரண்டு பிணையாளர்களும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் இருந்தால் வாக்குமூலம் பெறுவது இன்னும் எளிதானது. நீதிமன்ற அனுமதி பெற்று அதனை மேற்கொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, விசாரணைகளுக்காக பொலிஸார் கோரிய அனைத்து உத்தரவுகளையும் நீதவான் பிறப்பித்ததுடன், மரண பரிசோதனை தொடர்பான மேலதிக சாட்சிகளை அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
இன்றைய விசாரணையின் போது, சம்பவ இடத்துக்கு முதலில் சென்ற தனியார் வைத்தியசாலையின் செவிலியர் கோசல ரத்னஜீவ சாட்சியமளித்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்
அவர் வழங்கிய சாட்சியத்தில், சம்பவம் நடந்த காலை அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து நோயாளர் காவு வண்டியில் சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும், அங்கு மேல்தள அறையில் ஒருவர் தரையில் கிடந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

கழுத்தில் துணிப் பட்டி கட்டப்பட்டிருந்ததாகவும், வைத்தியர் பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பணிபுரியும் ராஜேந்திர குமார் சிவகுமார் சாட்சியமளிக்கையில், சம்பவம் நடந்த இரவு கபில சந்திரசேன சமையலறை பகுதியில் கையில் வெள்ளை நிறப் போத்தலுடன் நின்றுகொண்டிருந்ததை கண்டதாக தெரிவித்தார்.
அத்துடன், குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்களை நிறுவிய நிறுவனத்தின் பொறியியலாளர் கிரிஷாந்த கமலசிறி சாட்சியமளிக்கையில், கெமராக்களின் ஹார்ட் டிஸ்க் முன்னதாக சேதமடைந்திருந்ததாகவும் பின்னர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய தரவுகள் ஏன் சேமிக்கப்படவில்லை என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, மேலதிக சாட்சிய விசாரணை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.