போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு புதிய ‘குறைபாட்டுப் புள்ளி முறைமை’
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவை மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய போக்குவரத்துச் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கான "குறைபாட்டுப் புள்ளி முறைமை" (Demerit Points System) எதிர்வரும் 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பத்தரமுல்லை, கொஸ்வத்தை 'மகநெகும மஹமெதுர' அமைச்சரவை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
2026 ஒக்டோபர் முதல் 2027 மார்ச் வரையிலான ஆறு மாத காலப்பகுதி சாரதிகள் இந்தப் புதிய முறைமை குறித்து விழிப்புணர்வு பெறுவதற்கும், தம்மைப் பொருத்திக் கொள்வதற்குமான சோதனைப் பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2027 மார்ச் மாதம் முதல் போக்குவரத்து விதிகளை மீறும் 33 குற்றங்களுக்காக இந்தக் குறைபாட்டுப் புள்ளி முறைமை நாடளாவிய ரீதியில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
அத்துடன், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பின்டெக் (Fintech) செயலிகள் ஊடாக Gov-Pay மூலம் இணையவழியில் (Online) தண்டப்பணத்தைச் செலுத்தும் வசதிகளும் தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "வருடாந்தம் வீதி விபத்துக்களால் 2,750 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதைத் தடுப்பது அவசியமாகும்.
அதன் மூலம் உயிர் மற்றும் சொத்து அழிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாரிய இழப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது ஒரு சொத்தோ அல்லது உரிமையோ மட்டும் அல்ல, அதுவொரு பாரிய பொறுப்பாகும்.
இந்த ஆறு மாத பரிசோதனை முயற்சி மக்கள் இதனுடன் பழகிக் கொள்வதற்காக வழங்கப்படும் காலமாகும். இதன் உண்மையான தாக்கம், சட்டத்தை மதிக்காமல் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மீது மட்டுமே இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.