வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
களுத்துறை - வாதுவை பொதுபிட்டிய காலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
களுத்துறையிலிருந்து வாதுவை நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு உந்துருளிகளின் கைப்பிடிகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று உரசியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, ஒரு உந்துருளி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. மற்றைய உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திற்குச் சென்று, எதிரே வந்த சிற்றூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞரும் பாடசாலை மாணவியும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய மற்றைய உந்துருளியின் சாரதி மற்றும் சிற்றூந்தின் சாரதி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.