காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் வழக்கு ; வனஜீவராசிகள் திணைக்களம் எச்சரிக்கை
கதிர்காமம் - புத்தளம் வீதியில் நடமாடும் காட்டு யானைகளுக்கு சட்டவிரோதமான முறையில் உணவு வழங்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வாகனங்களில் இருந்து இறங்கியோ அல்லது வாகனங்களுக்குள் இருந்தவாறோ காட்டு யானைகளுக்கு உணவு வழங்குவதன் காரணமாக, அவை வீதியை ஒட்டிய பகுதிகளில் தங்கியிருக்க பழகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதி விபத்துகளும் அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தற்போது அந்த வீதியில் சுமார் 08 காட்டு யானைகள் வாகனங்களை மறித்து உணவு பெற்றுக்கொள்ள பழகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 06 ஆண்டுகளில் இந்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக 03 பெண்களும் 02 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆண்டொன்றுக்கு 100 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சேதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றச்சாட்டின் பேரில், காட்டு யானைகளுக்கு உணவு வழங்கும் வாகனங்களை காணொளிப் பதிவு (Video) செய்து, தொடர்புடைய நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊவா மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.