ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித
ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர், உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையை மேலும் உள்ளடக்கியதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு, அதற்குள் அர்த்தமுள்ள மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதை இலங்கை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்கால உலக யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், புதிதாக உருவெடுக்கும் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் அதன் நிறுவனங்கள் திறம்படச் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையிலும், ஐ.நா அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், காசா பகுதிக்குத் தடையற்ற மனிதநேய உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், நியாயமான சர்வதேசக் கடன் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய நச்சு வாயுக்களின் உமிழ்வுகளுக்குக் மிகக் குறைவாகப் பங்களித்த நாடுகளே காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளைத் தொடர்ந்து அனுபவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டினார்.
'டித்வா' புயல் இலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததுடன், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியது. காலநிலை நீதி என்பது உடனடியாகச் சாத்தியப்பட வேண்டிய ஒரு யதார்த்தமாக மாற வேண்டும்.
இலங்கை 2030 ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும், 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலைமையையும் (carbon neutrality) எட்டுவதற்கான இலக்குகளை நோக்கிச் சரியாகப் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் நிலவும் மக்களின் துயரங்கள் குறித்து இலங்கை தொடர்ந்து கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புச் சபையின் போர்நிறுத்தத் தீர்மானத்தைப் பின்பற்றுமாறும், பொதுமக்களுக்கு மனிதநேய உதவிகள் தடையின்றிச் சென்றடைவதை அனுமதிக்குமாறும், கசாவின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பிற்கு உடனடி முன்னுரிமை அளிக்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், 1967 ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் இணைந்து இயங்கும் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாட்டிற்கான இலங்கையின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் தனது பிராந்திய கடற்பரப்பிற்கு அருகில் ஆபத்தில் சிக்கிய ஒரு கப்பலிலிருந்து மாலுமிகளை இலங்கை மீட்டதை சுட்டிக்காட்டிய ஹேரத், நாடு தனது நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனித உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் 2022 நெருக்கடிக்குப் பிறகு இலங்கை மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்துள்ள போதிலும், கடன் மற்றும் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகளால் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளது என்றார்.
சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், கடன் மற்றும் அபிவிருத்தி நிதி தொடர்பில் நியாயமான விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையின் உள்நாட்டு மோதலினால் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நிறுவனங்களை வலுப்படுத்தி வருவதாகவும், அரசியல் தலையீடுகள் இன்றி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளையும் வழக்குத் தொடர்தல்களையும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், தொழில்நுட்பத்தை அனைவரும் சமமாக அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) நெறிமுறை சார்ந்த பயன்பாடு குறித்து இலங்கை தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.