இலங்கையில் இனி தமிழிலும் பாடப்படவுள்ள தேசிய கீதம்!
அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்களம் என்பன இந்நாட்டின் அரச மொழிகளாகும் எனவும் அவர் கூறினார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை. இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டும் அரச மொழிகளாகும் என்றார்.
இதே வேளை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த, பந்துல குணவர்த்தன, அலி சப்ரி , விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.