விண்ணில் பாய்ந்த நாசாவின் புதிய அதிநவீன தொலைநோக்கி ; பிரபஞ்ச ரகசியங்களை தேடுகிறது ‘ரோமன்’
நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விண்வெளித் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள் மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘ரோமன்’ தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லாக்ரேஞ்ச் பொயின்ட் 2 (L2) எனப்படும் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிகளை விட அதிகமான பரந்த பார்வைத்திறனைக் கொண்டுள்ள ‘ரோமன்’, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குவதற்கும் உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹப்பிள் தொலைநோக்கியால் நீண்ட காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பெருமளவிலான விண்மீன் மண்டல ஆய்வுகளை, ‘ரோமன்’ தொலைநோக்கியால் குறுகிய காலத்திலேயே மேற்கொள்ள முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறைந்தது ஐந்து ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளித் தொலைநோக்கி, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் விரிவாக்கம் மற்றும் புதிய உலகங்கள் தொடர்பான மனிதகுலத்தின் புரிதலில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.