நேபாள வெள்ளத்தில் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர்
நேபாளத்தில் தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.
திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.

தேநீர் இடைவேளை
இருப்பினும், ஒரு சிறு தேநீர் இடைவேளையால் இந்தப் பெரு வெள்ளத்தில் சிக்காமல் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர், நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர்.
நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 5-வது நாளில்தாடிங் என்ற மாவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.
இந்த நிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதையும் இவர்கள் பார்த்துள்ளனர்.
அதிருஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தேநீர் இடைவெளி எடுத்துக் கொண்டதால் உயிர் தப்பியதாகக் கூறினர். 5 - 10 நிமிடங்கள் முன்சென்றிருந்தாலோ விரைவாகக் கிளம்பியிருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும்.
அவர்கள் 5 பேரும் இரு நாள்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த இரு நாள்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தையும் மேலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்தனர்.