யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.