அரசாங்கம் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்ஷ
மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தெருக்களில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த நாமல்,
"தற்போதைய காவல்துறை மா அதிபர் நாட்டின் காவல்துறைத் தலைவராகச் செயற்படவில்லை, மாறாக அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காவல்துறை மா அதிபர்களாகவே செயல்படுகிறார் என்றும் சாடினார்.
அரசியல் அழுத்தம் மற்றும் பழிவாங்கல் பயம் காரணமாக காவல்துறை அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சுதந்திரமாகச் செய்யத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்போது கஞ்சா செய்கையுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாக நாமல் குற்றம் சுமத்தினார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கஞ்சா தோட்டத்தை முற்றுகையிட்ட காவல்துறை அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதாகவும், அதில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சம்பந்தப்பட்ட சிற்றூந்து விபத்து குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதன் மூலம், அரசாங்கம் அந்த விசாரணைகளை முடக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்ட அமலாக்கத் துறையில் தலையிடுவதாகவும், இத்தகைய சம்பவங்களின் போது பொலிஸ் மா அதிபர் மௌனமாக இருப்பது ஏன் என்றும் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.