டோர்ச் லைட்டுடன் நாடாளுமன்றம் சென்ற எம்பி! பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் டோர்ச் லைட்டுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் தெரிவித்தார். ஒரு பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது பிரச்சனையல்ல என்றும், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுக்கப்பட்டதே பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மின்வெட்டினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்காட்டும் விதமாக நேற்று நாடாளுமன்றத்தில் டோர்ச் லைட் ஏற்றியதன் காரணமாக ஏற்பட்ட சசலப்பு ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற விவாதம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பொருளை பரிசோதிக்குமாறு பொலிஸார் கோரியபோது மோதல் ஏற்பட்டதாக சபையின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று அறிவித்தார்.
இதனையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தான் கழிவறையை பயன்படுத்தும்போது மின்வெட்டு ஏற்படக்கூடும் எனவும், அதனால்தான் 3 டோர்ச்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
அதற்கு , நாடாளுமன்றத்துக்குள் இவ்வாறான பொருற்கள் அனுமதிக்கப்படாததால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மின்வெட்டு ஏற்பட்டாலும், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதனையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.