flydubai விமான சம்பவம்; இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!
டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற 'flydubai (FZ1073)' வானூர்தியை விபத்துக்குள்ளாக்க முயன்ற இணை விமானியுடன் போராடி, 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களின் "விவரிக்க முடியாத வீரத்தை" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
வானூர்தி காக்பிட்டில் (Cockpit) இணை விமானி கூரான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதிலும், வானூர்தியின் அமைப்புகளைச் சேதப்படுத்தி வானூர்தியை கீழே வீழ்த்த முயன்றபோதும், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அவரோடு தைரியமாகப் போராடினார்.

174 உயிர்களைக் காப்பாற்றிய உண்மையான ஹீரோ
பின்னர் காக்பிட் கதவைத் திறந்து, பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் இணை விமானியை மடக்கிப் பிடிக்க உதவியுள்ளார். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வானூர்தி சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது அறுவை சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காணொளி செய்தி வெளியிட்ட பிரதமர் நெதன்யாகு, "கடுமையான காயமடைந்த போதிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய தைரியம் ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது.
174 உயிர்களைக் காப்பாற்றிய அவர் ஒரு உண்மையான ஹீரோ. அவருக்கு எனது வீரவணக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.